நாகர்கோயில் கிராமமும் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயமும்

நாகர்காயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகைதரும் அடியார்களின் வேண்டு கோளுக்கும் விருப்பத்திற்கும் அமைய நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வரலாற்றினை எழுதுவதற்கு முன் வந்தேன். இவ் ஆலய பரம்பரையில் வந்த ஒருவன் மற்றும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பொருளாளர் என்ற வகையில் இவ்வாலயம் தொடர்பில் எனக்குத் தெரிந்தவற்றையும் மற்றும் இவ்வாலய பரம்பரையில் வந்த எனது தந்தை காலஞ் சென்ற ஆசிரியர் முருகேசு சதாசிவம் வல்லிபுரநாதர் மற்றும் இவ்வாலய பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்த எனது சிறிய தந்தையார் சின்னவர் முருகர் சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் குறிப்புக்களில் இருந்தும் சிலவற்றினை எடுத்துத் தொகுத்து வெளியிட முன்வந்துள்ளேன். நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வரலாற்றைக் கூறுவதற்கு முன் எமது பூர்வீக கிராமமும் மிகவும் பழமையும் தொன்மையும் கொண்டதுமான எமது நாகர்கோயில் கிராமத்தைப் பற்றியும் ஒரு சிலவற்றைக் கூறலாமென எண்ணுகிறேன்.

நாகர்கோயில் கிராமம்

இலங்கையின் வடபாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் குடாநாட்டின் வடபால் உள்ள பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில் 15வது கிலோ மீட்டர் முதல் 22வது கிலோ மீட்டர் வரையுள்ள 7 கிலோ மீட்டர் நீளத்தினையும் ஏறக்குறைய 5 கிலோ மீட்டர் அகலத்தையும் கொண்ட மிகவும் தொன்மையானதும் பழமையான பாரம்பரியத்தினையும் கொண்ட புண்ணிய பூமி நாகர்கோயில் என்னும் கிராமமம். நாகர்கோயில் கிராமம் ஆதியில் நாகர்கோயில், குடாரப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோயில் கிராமத் தலைமைக்காரன் திரு.கணபதிப்பிள்ளை கந்தையா அவர்களின் கீழ் நாகர்கோயில், நாகர்கோயில் வடக்கு கிராமமும் குடாரப்பு கிராமத் தலைமைக்காரன் திரு.முருகர் தில்லைநாதர் அவர்களின் கீழ் குடாரப்பு, குடரப்பு வடக்கு கிராமமும் இருந்துள்ளது. குடாரப்பு கிராமத் தலைமைக்காரன் காலமானதின் பின் நாகர்கோயில், குடாரப்பு ஆகிய இரண்டு கிராமங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நாகர்கோயில் கிராமத் தலைமைக்காரன் திரு.கணபதிப்பிள்ளை கந்தையா அவர்களின் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. காலப்போக்கில் இலங்கையில் கிராமத் தலைமைக்காரன் பிரிவுகள் இல்லாதொழிக்கப்பட்டு கிராம சேவையாளர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. நாகர்கோயில் கிராமத் தலைமைக்காரன் பிரிவு J/145 நாகர்கோயில் கிராம சேவையாளர் பிரிவு என பெயர் மாற்றப்பட்டது. J/145 நாகர்கோயில் கிராமசேவையாளார் பிரிவின் முதலாவது கிராம சேவையாளராக நாகர்கோயில் கிராமத்தினைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் சுந்தரலிங்கம் என்பவர்
நியமிக்கப்பட்டிருந்தார். காலப்போக்கில் 1987 ஆம் ஆண்டளவில் J/145 நாகர்கோயில் கிராம சேவையாளர் பிரிவு J/423 நாகர்கோயில் கிழக்கு,J/424 நாகர்கோயில் மேற்கு, J/425 நாகர்கோயில் தெற்கு என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. இக் கிராமம் முன்பு வடமராட்சி பிரிவுக் காரியாதிகாரி கந்தோரின் கீழ் இருந்து வந்துள்ளது. பிரதேச செயலாளர் பிரிவுகள் உருவாக்கப்பட்டதின் பின் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவுக்கும், பருத்தித்துறை பொலிஸ் பிரிவு மற்றும் குடத்தனை கிராம சபைக்கு உட்பட்ட ஒரு கிராமமாக இருந்துள்ளது. தற்பொழுது இக் கிராமம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளார் பிரிவு,
பருத்தித்துறை பொலிஸ் பிரிவு மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைக்கு உட்பட் ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. நாகர்கோயில் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை J/425 நாகர்கோயில் தெற்கு கிராசேவையாளார் பிரிவிலும், நாகர்கோயில் மகா வித்தியாலயம் (நாகேஸ்வர வித்தியாலயம்)J/424 நாகர்கோயில் மேற்கு கிராம சேவையாளார் பிரிவிலும், நாகர்கோயில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைJ/423 நாகர்கோயில் கிழக்கு கிராம சேவையாளார் பிரிவிலும் அமைந்துள்ளது. நாகர்கோயில் கிராமம் மருத நிலமும், நெய்தல் நிலமும், பாலை நிலமும் பொருந்திய இடமாக இருப்பதைக் காணலாம். இப்புண்ணிய பூமியிலே மிகப் பழமையும், தொன்மையும், புதுமையும் வாய்ந்த புராதன நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயமும், நாகர்கோயில் மாளிகைத்திடல் கண்ணகை அம்மன் ஆலயமும் அமையப்பெற்று மக்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருப் பதைக் காணலாம். இக்கிராமத்தில் ஆதியில் நாகர் சாதியினர் வாழ்ந்திருந்தார்கள் எனவும் நாகரது சிற்றூராக இருந்துள்ளது எனவும் நம்மவர் கூறுவர். நாகரது சிற்றூராக விளங்கியதினால் அவர்களே நாகர்கோயில் என்னும் இப் பெயரினைச் சூட்டியிருப்பார்கள் என்பது நம்முன்னோர் கருத்து. நாகர்கோயில் வடக்கில் கவுத்தந்துறை என்று அழைக்கப்படும் ஒரு துறைமுகம் இருந்துள்ளது. இத் துறைமுகத்திற்கும் இங்கு கோயில் கொண்டிருக்கும் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக அறிய முடிகிறது. நாகர்காயில் கவுத்ததந்துறை துறைமுகம் இருந்த இடத்திற்கு அருகாமையில் கவுத்தந்துறை பிள்ளையார் ஆலயம் ஒன்று அமைந்திருப்பதை நாம் காணலாம். மேலும் நாகர்கோயில் கிராமத்திற்கு ஐந்து மைல் சுற்றாடலில் தட்டார் குடியிருப்பு, சோழன் குடியிருப்பு, செம்பியன்பற்று என்று சோழனின் பெயர் குறிப்பிட்டு விளங்கும் கிராமங்களும் காணப்படுகின்றன. எனவே இக் கிராமம் முன்பு சோழர்களின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்திருக்கலாம் என எண்ணுவதற்கும் இடமுண்டு. கவுத்தந்துறை என்று இன்றுவரை அழைக்கப்படுவதாகிய இத்துறைமுகமும் இக்கிராமத்தை அடுத்து காணப்படும் மணற்திடல்கள் ஆங்காங்கே புதையுண்டு கிடக்கும் பண்டைய நாணயங்கள் சிதைவடைந்த மட்பாண்டங்கள் முதலியவற்றை இன்றும் காணலாம். இவைகள் இக் கிராமத்தின் புராதன பெருமைக்குச் சான்றுபகருவதுடன் இங்கு ஒரு சிறிய இராசதானி இருந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கும் இடமுண்டு.

தொழில்

நாகர்கோயில் தெற்கு, குடாரப்பு ஆகிய பிரிவுகளில் வதியும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாகர்கோயில் மேற்கு, நாகர்கோயில் கிழக்கு,குடாரப்பு வடக்கு பகுதியில் வதியும் மக்களின் பிரதான தொழில் மீன்பிடி. ஆதியில் நாகர்கோயில் கிராமத்தில் வாழ்ந்த மக்கள் சிறந்த பக்திமான்களாகவும், சமையப் பற்றுடையவர்களாகவும்,ஆலயங்களில் புராண இதிகாசங்களுக்கு பொருள்விரித்துக் கூறுபவர்களாகவும், கல்விமான்களாகவும், சுதேச வைத்தியர்களாகவும், கலை, கலாச்சார விழுமியங்களில் ஈடுபடுடையவர்களாகவும், அண்ணாவிமார்களாகவும் இருந்து பாரம்பரிய பண்பாடு, கலை, கலாச்சாரங்களைப் பேணி கலைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் வல்லுனர்களாக விளங்கி பல நாடகங்களையும், நாட்டுக் கூத்துக்களையும் மேடையேற்றி இக்கிரமத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். பலர் அரச நிறுவனங்களில் நிர்வாகத்துறைகளிலும், மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், வங்கிகளிலும் மற்றும் தனியார் துறைகளிலும் பணியாற்றி வருவதுடன் இந்நாட்டிற்கும் இக் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இடப் பெயர்வு

இலங்கையில் நிலவிய அசாதாரண யுத்த சூழ்நிலை காரணமாக நாகர்கோயில் கிராம மக்கள் 2000 ஆம் ஆண்டு மார்ச்மாதம் 3 வது வாரம் இக் கிராமத்திலிருந்து தங்கள் உடமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு உடுத்த உடையுடன் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டது.நாகர்கோயில் கிராமம் அதி உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஆண்டு ஆவணி மாதம் 21 ஆம் திகதி வரை இக் கிராமத்துக்கு மக்கள் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. இப் பகுதியில் உள்ள ஆலயங்கள் எதிலும் பூசை ஆராதனை வழிபாடு எதுவும் இடம்பெறாது தடைப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் அளவில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21 ஆம் திகதி முதல் நாகர்கோயில் வரலாற்றுப் புகழ்பெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்துக்கும் அதன் அருகாமையில் அமைந்துள்ள நாகர்கோயில் மாளிகைத்திடல் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்துக்கும் அடியார்கள் இராணுவ பாதுகாப்புடன் சென்று பூசை வழிபாடுகளை மேற் கொள்வதற்கு இலங்கை அரசினால் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் மேற்குறித் ஆலயங்களில் புனர்நிர்மாண வேலைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி முதல் மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட பொழுதும் இப்பகுதியில் உள்ள நிலக்கண்ணி வெடிகள் முற்று முழுதாக அகற்றப்படாத காரணத்தினால் இப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட இடங்களில் மக்கள் மீள் குடியமர்ந்துள்ளனர். இன்னும் சில இடங்களில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வரலாறு

இலங்கையின் வடபாகமாயுள்ள யாழ்ப்பாணக் குடநாட்டின் வடமுனையில் பருத்தித்துறை பட்டினத்தின் கீழ் திசையில் 18 வது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோயில் என்னும் பழம் பெரும் கிராமத்தின் மத்தியில் மருத நிலமும், நெய்தல் நிலமும், பாலை நிலமும் பொருந்திய வரலாற்று சிறப்பு மிக்க இப் புண்ணிய பூமியில் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயமும், அருள்மிகு மாளிகைத்திடல் கண்ணகை அம்மன் ஆலயமும் அமையப் பெற்றுள்ளது. இப் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் இன்ன காலத்திலே தோன்றியதென யாராலும் வரையறுத்துக் கூறமுடியாது உள்ளது. இலங்கைத் தீவில் ஆதியில் இயக்கர், நாகர் என்ற இரண்டு சாதியினர் வாழ்ந்தார்களென்று வரலாறு கூறுகின்றது. இயக்கர் பைசாசு வழிபாட்டினையும் நாகர் சர்ப்ப வழிபாட்டினையும் உடையவர்களாக இருந்துள்ளனர் என அறியக்கிடக்கின்றது. ஆதியிலே இக் கிராமம் நாகரின் சிற்றூராக இருந்ததாகவும் நாகர் இனத்தவர் நாகவழிபாடு உடையவர்க
ளென்றும் இவர்கள் தங்கள் தலைவனை தம்பிரான் என்று அழைக்கும் வழக்கம் உடையவர்களென்றும் ஆன்றோர் கூறுவர். இவர்கள் தமது தலைவனது பெயரினையும் தங்கள் இனத்தின் பெயரினையும் இணைத்து தாம் வழிபடும் தெய்வத்திற்கு நாகதம்பிரான் என்னும் பெயரினைச்சூட்டி நாக வழிபாட்டினை மேற் கொண்டிருந்தனர் என்று நம்மவர் கூறுவர். இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள இடம் ஆதியில் அத்தி, ஆல். சந்தனம், சம்பு, கொக்கட்டி,நாவல், நல்வேம்பு, மருது முதலிய பெருநிழல்தரு விருட்சங்களும்,தண்டாமரை வாவிகளும், நீராடு கேணிகளும் நிறைந்து விளங்கியதென்பதை இங்கு காணப்படும் பழைய நூற்பாக்களால் அறிய முடிகின்றது. ஏனைய விருட்சங்கள் அருகியபோதிலும் வானளாவிய மருதமரங்கள் இன்றும்
மங்காதமகிழ்வூட்டும் சோலையாக விளங்குவதோடு அதுவே இத்தல விருட்சமாகவும் போற்றிப் பேணப்படுகின்றது. பின்னர் சேர, சோழ, பாண்டிய மண்டலங்களிலிருந்து வந்து குடியேறிய காலத்து நாகர்கோயிலும், அவர்கள் வசமாகியதாம். முன்பு நாகர் வழிபாடு செய்த இடத்தில் திருவருள் விளங்கக்கண்ட இம்மக்கள் தாமும் அம்மரவடியில் மெய்யன்போடு இறைவழி பாட்டினை மேற்கொண்டு வந்துள்ளனர். இம் மக்களின் பக்தி விசுவசத்தைக்கண்ட எம்பெருமான் அடியவர்களுக்கு
அருள்புரிந்து வந்தார்.நாகர்கோயில் என்னும் இப்பழம்பெரும் கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மோகாம்புரி என்னும் பெயரையுடைய பொற்கொல்லர் ஒருவர் குடாரப்பு தட்டார் குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்திருந்தார். அவர் ஒரு சிறந்த பக்திமானாவர். அவர் இவ்வாலய வழிபாட்டுக்கு செல்லும் போதெல்லாம் எம்பெரும உன்னை யாரென்றறியவும் காணவும் அடியேன் விரும்புகிறேன் என்று வணங்கிச் செல்வாராம். ஒருநாள் அந்நாட்டு மன்னன் அப் பொற் கொல்லனை அழைத்து தமது மக்கள் வழிபடும் அம் மூர்த்திக்கு ஒரு திருவுரு அமைத்துத்தருமாறு வேண்டி பொன் பொருள் முதலியவற்றை கொடுத்தானாம். மன்னன் கட்டளையை மறுக்க முடியாத மோகாம்புரி என்னும் பொற்கொல்லர் இம் மரவடித் தெய்வம் எத்தெய்வமோ நானறியேன். எப்படி நான் உன் திருவுருவை அமைப்பேன் நீதான் எனக்கு அருள்புரிய புரியவெண்டும் என்று வேண்டி நிற்பானாம். நம்பினார் கைவிடப்படுவதில்லை. நம்பினார்க்கு அருள்புரியும் எம்பெருமான் அவனது கனவிலே தோன்றி அன்பனே நீ கவலைப்படதே ஆதிநாதனின் திருவுருவை நீ வழிபடும் இடத்திற்கு அருகாமையில் உள்ள “அத்தி” மரத்தில் காண்பாய் அதன்படி அரசன் பணியை நிறைவேற்றுவாய் என்று கூறி மறைந்தருளினார். மறுநாள் அதிகாலை வைகறைப் பொழுதில் எழுந்தவுடன் தான் வழிபடும் இடத்திற்கு அருகாமையில் உள்ள “அத்தி” மரத்தடிக்கு சென்று பார்த்தபோது விழுதேவிடாத அத்தி மரத்தில் விழுது ஒன்று ஐந்து தலை நாகரூபமாக ஆடக்கண்டு மெய்சிலிர்த்து பக்திப்பரவசமாகி வீடு சென்று தனது கைப்பட தாமிரத்தாலான ஒரு நாகபடத்தை வடித்து அரசன் பணியை நிறைவேற்றி எம்பெருமான் ஆசியையும் அரசனின் மதிப்பையும் பெற்றான் என்பது எம்முன்னோர் கூற்று. அன்று முதல் அத்திரு நாகபடமே இவ்லாலயத்தின் மூலமூர்த்தியாக விளங்கி அருள்புரிந்து வரலாயிற்று.

நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய ஸ்தாபகரும் பூசகர்களும்

1845ல் சிதம்பரர் இரகர் என்பவர் ‘கம்பன்சீனா” என்னும் காணியில் நாகர்கோயில் நாகதம்பிரான் ஆலயத்தை களிமண்ணினால் அமைத்துள்ளார். அதன் முகாமையாளராக,பூசகராக இவரது மகன் இரகர் சிதம்பரப்பிள்ளை இருந்துள்ளார் இவ்வாலயத்தில் 10 திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளது. நாளொன்றிற்கு ஒரு திருவிழாவிற்கு ரூபா.45/= செலவாவதாகவும் இவ் விழாவிற்கு குடத்தனை, வரணி வடக்கு, துன்னாலை,நாகர்கோயில், எழுதுமட்டுவாள்,அம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து 500 வரையான மக்கள் பங்குபற்றுவதாகவும் யாழ்ப்பாணம் கச்சேரியில் உள்ள 1884 ஆம் ஆண்டின் இந்து ,கிறிஸ்தவ ஆலயங்கள் பதிவேட்டிலிருந்து அறிய முடிகின்றது. இது ஒரு மிக பழமையும் புதுமையும் கொண்ட ஆலயமாகும். இவ்வாலயத்தின் இறுதிக்கால பூசகராக சிதம்பரர் இரகர் பரம்பரையில் வந்த முருகேசு சதாசிவம் 1924 முதல் 1933 ஆண்டு வரை பூசகராக, முகாமையாளராக இருந்துள்ளார். அதே போன்று இவர் அருகாமையிலுள்ள நாகர்கோயில் மாளிகைத்திடல் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலயத்தின் பூசகராக,முகாமையாளராக
இருந்துள்ளார். இவ் ஆலயம் 1875ல் சிதம்பரர் இரகர் எனபவரினால் ஸ்தாபிக்கப்பட்டது என 1884ம் ஆண்டின் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் பதிவேட்டிலிருந்து அறிய முடிகின்றது. முருகேசு சதாசிவம் இயற்கை யெய்தியதின் பின் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு துன்னாலையைச் சேர்ந்த முத்துச்சாமிக் குருக்கள் நியமிக்கப்பட்டார். அவரின் பின் அவரது பரம்பரையில் வந்த சகோதரர்களாகிய சோமாஸ்கந்தக் குருக்கள்,சபாரத்தினக் குருக்கள் கணபதிசாமிக் குருக்கள் ஆகியோர் பூசை ஆராதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கிய பின் கணபதிசாமிக் குருக்களின் மகன் நாகதம்பிரான் உபாசகர் சிவஸ்ரீ சிவசண்முகக் குருக்கள் தொடர்ந்து இரண்டாயிரம் ஆண்டுவரை நெறிமுறை தவறாது பூசனை புரிந்து வரலாயினார். தற்பொழுது இவ்வாலய முக்கிய நிகழ்வுகளிலும் வருடா வருடம் நடைபெறுகின்ற பத்து உற்சவகால திருவிழாக்களிலும் பிரதம குருவாக இருந்து செயற்பட்டு வருகிறார். இவ்வாலயத்தின் முகாமையாளர்கள் பரம்பரையில் வந்த முருகேசு சதாசிவம் இறைவனடி சேர்ந்த பின் சிதம்பரப்பிள்ளையின் மகள் சின்னவர் முருகர் சிவக்கொழுந்து முகாமையாளராக இருந்து வந்துள்ளார்.சின்னவர் முருகர் சிவக்கொழுந்துவின் பின் அவரது மகன் சின்னவர் முருகர் சிதம்பரப்பிள்ளை இவ்வாலயத்தின் பரம்பரைத் தர்மகர்த்தாவாக பரிபாலன சபையின் தலைவராக இருந்துள்ளார். தற்பொழுது அவரது மகன் முருகர் சிதம்பரப்பிள்ளை இராஜரஞ்சன் பரம்பரைத் தர்மகர்த்தாவாக,
முகாமையாளராக,ஆலய பரிபாலனசபை பரம்பரைத் தலைவராக இருந்து எம்பெருமான் பணிகளை ஆற்றி வருகிறார். இவ்வாறிருக்கும்கால் அடியார்கள் உள்ளத்தில் இது ஒரு சிவஸ்தலமாகவும் விஷ்ணுதலமாகவும் காட்சி கொடுத்து வந்தமையால் காலப்போக்கில் சிவலிங்கத்தை உள்ளடக்கிய ஐந்துதலை நாகபடத்தையே இத்தல மூலமூர்த்தியாக அமைத்து இங்கு நடைபெறும் நித்திய பூசை நைமித்தியங்கள்; சிவனுக்குரியதாகவே நடைபெற்று வருகின்றது. “இடபவாரூடரோ கெருடவாரூடரோ எத்தேவரோ அறிகிலோம்” என்ற பழைய பாடலில் உள்ள ஒரு சொற்றொடரால் விஷ்ணு அம்சமும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் ஆதிமுதல் இப்பதியின் கண்ணுள்ள மருதமர உச்சியில் கருடன் இனத்தைச் சேர்ந்த “ஆலா” என்னும் புள்ளரசுத் தொகுதி இருக்கை அமைத்து வசித்து வருவதை இன்றும் நாம் காணலாம். தினமும் வைகறை பொழுதிலும்;இ பொழுது அஸ்த்தமன வேளையிலும்;இ மழை பொழியும் இருள் சூழ்ந்த காலங்களிலும் மருதமர உச்சியிலிருந்து இப்புள்ளினம் “ஞாக்இ ஞாக்” என்னும் நாத ஒலியை எழுப்புங் கிரமமுடையன. இவ்வொலியைக் கேட்டமாத்திரத்தில் விஷசற்பங்கள் யாவும் வீரம் குலைந்து அடங்கி ஒடுங்கி கரந்துறையும். இவ்வெச்சரிக்கை ஒலி என்றும் குறையாது விளங்குவதற்கு காரணம் நாகேஸ்வரப்பெருமனின் திருவருளேயன்றி வேறொன்றுமில்லை. இவ்வெச்சரிக்கை ஒலியினால் இங்கு வாழும் மக்கள் தாமறியாமலே விஷ ஜந்துக்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு பெரிதும் பலனடைகின்றனர். இதுபோன்ற இறையருளினால் இப்பகுதி மக்கள் விசக்கடிக்கு அஞ்சுவதுமில்லை அவுடதம் தேடுவதுமில்லை.

ஆலய கும்பாபிஷேகங்கள்

நாம் அறிந்தவரையில் இவ் ஆலயத்தில்; காலயுத்தி வருடம் 1918 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28 ஆம் திகதி வியாழக்கிழமை சிங்க லக்கினம் பூர்வபட்சத்து சப்தமி திதியில் அனுச நட்சத்திரத்தில் ஒரு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அன்று முதல் சிவலிங்கத்தை உள்ளடக்கிய ஐந்துதலை நாகபடமே இத்தல மூல மூர்தியாகவும் அதன் அருகில் முன்பு மூலமூர்த்தியாக விளங்கிய தாமிரத்தினாலன மூலமூர்தியும் அமையப் பெற்றுள்ளது. இங்கு நடைபெறும் பூசைகள் நித்திய நைமித்தியங்கள் யாவும் சிவனுக்குரியதாகவே நடைபெற்று வருகின்றது.இவ்வாலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் சித்தார்த்தி வருடம் ஆனி மாதம் (15.07.1979) 31 ஆம் திகதி நாவாலியூர் பிரம்மஸ்ரீ விஸ்வநாதக் குருக்கள் தலைமையில் இவ்வாலய பரம்பரைக் குரு கணபதிசாமிக் குருக்கள் உதவியுடன் இவ்வாலய பரம்பரைத் தர்மகர்த்தாவும் பரம்பரைஆலய பரிபாலன சபைத் தலைவருமாகிய முருகர் சிதம்பரப்பிள்ளை மற்றும் இக் கிராம மக்களின் அனுசரணையுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இவவாலயத்தின் மூன்றவது கும்பாபிஷேகம் யுவ வருடம் ஆனி மாதம் 4ஆம் நாள் (18.06.1995)ஞாயிற்றுக்கிழமை
ஸ்ரீகதிரமலை சிவன் தேவஸ்தான முத்தமிழ் குருமணி சிவஸ்ரீ நா. சர்வேஸ்வரக் குருக்கள் தலைமையில் இவ்வாலய பரம்பரைக் குரு நாகதம்பிரான் உபாசகர் சிவஸ்ரீ.க.சிவசண்முகக் குருக்கள் உதவியுடன்;. பரம்பரைத் தர்மகர்த்தாவும் ஆலய பரிபாலன சபையின் பரம்பரைத் தலைவருமாகிய முருகர் சிதம்பரப்பிள்ளையின் அனுசரணையுடன் நாகர்கோயில் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் மிக சிறபப்பாக நடைபெற்றுள்ளது. இவ்வாலயத்தின் நாலாவது புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் நந்தன வருடம் வைகாசித் மாதம் 22ஆம் நாள் (04.06.2012) பூரணைத் திதியும் அனுச நட்சத்திரமும்; மிதுன லக்கினமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரம்பரை பிரதமகுரு நாகதம்பிரான் உபாசகர் சிவஸ்ரீ.க.சிவசண்முகக் குருக்கள் தலைமையில் ஆலய பரம்பரைத் தர்மகர்த்தாவும் ஆலய பரிபாலன சபையின் பரம்பரைத் தலைவருமாகிய முருகர் சிதம்பரப்பிள்ளை எசமானாக இருந்து நாகர்கோயில் மக்கள் அனைவரது அனுசரணையுடனும் மிக விமரிசையாக நடைபெற்றது. அன்று முதல் இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக ஆரம்பத்திலே மூலமூர்தியாக விளங்கிய தாமிரத்;திலான ஐந்து தலை நாகபடமுமஇ; 1918ம் ல் நாகபடத்துடன் கருங்கல்லில் அமையப்பெற்ற சிவலிங்கத்துடன் சேர்ந்த லிங்கமுமஇ; 1979ல் நாகபடத்துடன் கருங்கல்லில் அமையப்பெற்ற சிவலிங்கத்துடன் கூடிய லிங்கமும் மூன்றும் ஒன்றாக மூலமூர்த்தியாக அமையப்பெற்று எம்மக்களுக்கு அருள்பாலித்து வருவதை நாம் காணலாம்

எல்லைகள்

இவ் ஆலயத்தின் வடக்கே வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நாகர்கோயில் மாளிகைத்திடல் அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் நரசிங்க வைரவர்இ வீரபத்திரர் ஆலயங்களும் மணல் கும்பிகளும்இ நாவல் மரங்களும்இ தெற்கே வயல் நிலங்களும்இ பருத்தித்துறை கட்டைக்காடு பிரதான வீதியும்இ தொண்டமானாறு கடல் நீர் ஏரியும் கிழக்கே சுடலைப்பிட்டி பிள்ளையாரஇ; குடரப்பு முருகன் ஆலயங்களும்இ வயல் நிலங்களும்இ மணல் கும்பிகளும் பனைஇ தென்னை மரங்களும்இ செம்பியன்பற்றுக் கிராமமும் மேற்கே பெரியவளவுப் பிள்ளையார் கோயில்இ நாச்சிமார் கோயில் பனைஇ தென்னை மரங்கள்;இ மணல் கும்பிகளும் மற்றும் அம்பன் கிராமமும் அமையப்பெற்றுள்ளது.

தல தீர்த்தம்

இத் தலத்திற்கு அருகாமையில் நாககேணிஇ பெண்டுகள்கேணிஇ சம்புக்கேணிஇ உப்புக்கேணிஇ மார்கழிக்கேணி என ஐந்து வகையிலான தீர்த்தங்கள் அமையப் பெற்றுள்ளமை ஒரு சிறப்பான அம்சமாகும். நாககேணி நாக தீர்தமெனவும்இ பெண்டுகள்கேணி சக்தி தீர்மெனவுமஇ; சம்புக்கேணி திருவெம்பா காலத்தில் நடராசர் தீர்;த்தமாடும் சிவ தீர்த்மெனவும். உப்புக்கேணி சமுத்திர தீர்த்தமெனவும்இ மார்கழிக்கேணி தனுதீர்த்தம் அல்லது பிண்ட தீர்த்தமெனவும் நம்மவர் கூறுவர் எனவே இவ்வாலயம் ஐந்து வகையான தீர்த்த விசேடம் பொருந்திய புண்ணிய தலமாக விளங்குவதை நாம் காணலாம்.

கோயில் மருந்து
ஆதிகாலம் தொட்டு இங்கு வாழும் மக்கள் எவ்வித கொடிய விஷம் ஜந்துக்கள் தீண்டியபோதிலும் வைத்தியம் செய்வதே இல்லை எனலாம். நாகேஸ்வரப் பெருமானில் அதீத நம்பிக்கையுடையராய் அவரது சன்னிதியில் கிடைக்கும் அற்புத மருந்தைப் பெற்று கோயிலின் அருகாமையில் அமைந்திருக்கும் நாககேணியில் நீரினைமென்று அவ் அருமருந்தினை கரைத்துக்
குடித்தும் கடிவாயிலில் பூசியும் வர சுகமடைவதை இன்றும் நாம் காணலாம். இங்கு வெண்மையான களிமண்போன்ற ஒரு மருந்து மூலஸ்தானத்தில் விளைந்து கொண்டிருக்கிறது. இம்மருந்து விளையுமிடத்தை முன்பு சுண்ணாம்பினால் சுற்றிக்கட்டி மேலே பலகையினால் மூடியிருந்தனர். அந்த இடத்தில் நாகசற்பங்கள் வாசம்செய்து வந்ததாக நம்முன்னோர் கூறுவர். இவ்வற்புத மருந்துதான் என்னவென அறிய யாவரும் விரும்பக்கூடும். மருந்தின் மகிமையைக் கூறலாமேயன்றி மருந்தின் தன்மையைக் கூற வல்லர் எவருமில்லை எனலாம். இது திருவருளேறிய திருமண். “மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் நம்பினவற்கே நலம் காட்டும்” என்பதுபோல நம்பினார்க்கு நஞ்சறும் நம்பாதற்கு மிஞ்சிடும். இவ்வரு மருந்தின் மகத்துவத்தை அனுபவவாயிலாக அறிந்த அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வேண்டி எம்பெருமான் ஆலயத்திற்கு வருகை தந்தவண்ணமுள்ளனர்.

கோயில் எண்ணெய்

நாகேஸ்வரப் பெருமான் தீர்த்மாடும் குழவாழைகள் நிறைந்த நாககேணியில் நீராடி ஆதிமூலம் நாகதம்பிரானின் மூலஸ்தானத்தில் எரிக்கப்படும் விளக்கின் எண்ணெயினை எடுத்து பூசிவர விசக்கடிஇ காணாக்கடிஇ ஆகியவற்றால் ஏற்படும் புண்இ சிரங்குஇ குட்டை முதலிய நோய் நொடிகள் நீங்குவதாக எம்மவர் கூறுவர். இப்பொழுதும் இக்கிராம மக்களில் பெரும்பாலானவர்கள் பூசை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர் எம்பெருமானின் மூலஸ்தானத்தில் எரிக்கப்படும் திருவிளக்கின் எண்ணெயினைப் பெற்றுச்செல்வதை இன்றும் நாம் காணலாம்.
மருதடி வைரவர்(ஞான வைரவர்)
மருதடி வைரவர் என்று எம்மவரால் அழைக்கப்படும் ஞான வைரவர் நாகதம்பிரான் ஆலய முன்றலில் மருதமர நீழலின் கீழ் வீற்றிருந்து மக்கள் காவலனாக நாலா பக்கமும் பார்த்து எம் மக்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வருகிறார் என்பது எம்மவர் கூற்று. இவருக்கு ஆலயம் அமைப்பதற்கு எம்மவர் முயற்சிகள் மேற்கொண்டபோதும் அது நடைபெறவில்லை. இவர் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் நாலாபக்கமும் பார்த்து எம்மவரைக் காத்து வருகிறார். இங்கு நடைபெறும் எல்லாப் பூசை ஆராதனைகளும் மருதடி ஞான வைரவருக்கும் நடைபெறும். ஆதிமுதல் இங்கு நாகேஸ்வரப் பெருமானும்இ மருதடி ஞான வைரவருமே எம் மக்களைப் பாதுகாத்து வந்தனர் என்று எம்மவர் கூறுவர்.

பரிவார மூர்த்திகள்

1979ம் ஆண்டில் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகத்தின் போது இவ்வாலயத்தில் பிள்ளையார்இ மஹாவிஷ்ணுஇ முருகமூர்த்தி ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் நவக்கிரகத்திற்கும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு பிரதிஸ்டை செய்யப்பட்டது. மேலும் 2012ம் ஆண்டில் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகத்தின் போது காவல் வைரவருக்;கும் ஆலயம் அமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டது.

ஆலய மத்தியில் அமர்ந்திருக்கும் எம்பெருமான்

தம்மிடம் வரும் அடியவர்களின் குறைகளை நீக்க எண்ணிய ஆதிநாதனாம் நாகேஸ்வரப் பெருமான் 2012ல் காட்சி கொடுத்து ஆலய முன்றலில் உள்ள அரசமர நீழலின் கீழ் வீற்றிருந்து நேரடியாக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாகதோஷத்தினை நீக்குவதற்காகவும்இ குழந்தைப்பாய்கியம் இல்லாதவர்கள் மற்றும் தீராத நீண்ட நோய்வாய்பட்டவர்கள் தினமும் ஆலயத்துக்கு வருகைதந்து அருகாமையில் அமைந்திருக்கும் நாககேணியில் நீரினை மென்று நீராடி ஆலய பூசகரிடம் தர்ப்பை அணிந்து தாங்கள் நேரடியாக பால் அபிஷேகம் செய்துவருகின்றனர். இதன் மூலம் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாக கூறுகின்றனர.; இதனால் பல இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பெருந்தொகையான பக்தர்கள் இங்கு வருகை தருவதினை அவதானிக்க முடிகின்றது.

அன்னதான பணி
2012 கும்பாபிஷேக நாள் முதல் ஞாயிறு தினங்களில ஆலய முன்றலில் உள்ள அன்னதான மடத்தில் மதியவேளை பூூசை முடிவுற்றதும்; இங்கு வரும் அடியவர்கள் பசியாறி செல்வதற்கு ஏற்றவகையில் அன்னதானம் வழங்கும் பணிகள்; நடைபெற்று வருகின்றது. மேலும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு இங்கு வரும் அடியவர்கள் நேரடியாக பொங்கல் செய்து எம்பெருமானுக்கு நிவேதித்து தமது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

பூசை நேரங்கள்;: தினமும் பகல் 9;.00 மணிக்கும் மதியம் 12.00 மணிக்கும் ஞாயிறு தினங்களில் பகல் 9.00 மணிக்கும் மதியம் 12.00 பிற்பகல் 4.00 மணிக்கும் பூசைகள் இடம்பெறுகின்றன

கப்பல் திருவிழா
நாகேஸ்வரப் பெருமானை எம்மவர் சிறைமீட்டவன் என்றும் அழைப்பர். இப் பதியில் புரட்டாதி மாதத்தில் பத்து திருவிழாக்கள் நடைபெறுகின்றது. இதில் கப்பல் திருவிழா புரட்டதி மாதம் பூரணையின் மறுநாள் வரும் பிரதமை திதியில் ஏழாவது திருவிழாவாக வருடாவருடம் நடைபெறுகின்றது. இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் கப்பல் திருவிழா கொண்டாடப் படுவதில்லை. எமது நாகர்கோயில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நாகர்கோயில் கவுத்தந்துறை துறைமுகத்திற்கும் நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெறும் கப்பல் திருவிழாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். “ நாகம் சரிந்த வாய்க்கால்” என்று எம்மவரால் அழைக்கப்படும் பாதையொன்று இத்துறையிலிருந்து பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் வரை பள்ளமான பகுதியாக இருப்பதை இன்றும் நாம் காணலாம். முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவில் சம்புத்தீவு என்னும் இடத்தைச் சேர்ந்த திருவனந்தபுரம் என்;ற கிராமம் பெருமழை காரணமாக அழிந்து போயிற்றாம். பெருந்தொகையான மக்களும் இறந்து போயினராம். இப்பகுதியில் மக்களைக் குடியேற்றுவதற்காக அந்நாட்டு மன்னன் சேர சோழ பாண்டிய மண்டலங்களில் ஒன்றாக விளங்கிய இலங்கைத் தீவிலிருந்து மக்களைக் கொண்டு சென்று அங்கு குடியேற்றுவதற்காக தனது சேனைத் தலைவர்களையும் படைகளையும் அனுபப்பியிருந்தானாம். இப்படைகள் தனுஸ்க்கோடி வழியாக காங்கேசன்துறைஇ மயிலிட்டிஇ வல்வெட்டித்துறைஇ பருத்தித்துறைஇ கற்கோவளம் ஆகிய பகுதிகளில் வியாபாரத்தை மேற்கொண்டு அப்பகுதிகளிலுள்ள மக்கள் சிலரையும் ஏற்றிக்கொண்டு நாகர்கோயில் கவுத்தந்துறையில் வந்து நங்கூராமிட்டனர். ஏழு நாட்களாக கவுத்தந்துறை துறைமுகத்தில் நங்கூரமிட்டு தங்கி இருந்தபோதும் மக்கள் எவரும் அங்கு செல்லவுமில்லை அவர்கள் கொண்டுவந்த பொருட்களை வாங்கவுமில்லை. இதனால் கப்பல் தலைவன் தாங்கள் கொண்டுவந்த ஜவுளிவகைகள் விளையாட்டுப் பொருட்கள்; முதலியவற்றை இவர்களுக்கு கொடுத்து இவர்களையும் தங்களுடன் வந்து பெருமழையினால் அழிந்த திருவனந்தபுரம் பகுதியில் குடியேறி சந்தோஷமாக வாழும்படி அழைப்பு விடுத்தானாம். ஆனால் இப்பகுதி மக்கள் இவர்கள் கொண்டுவந்த பொருட்களை வாங்கவுமில்லை அவர்களுடன் செல்வதற்கும் மறுப்பினைத் தெரிவித்தனராம். இதனால் கடும்சீற்றம் கொண்ட கப்பல் தலைவன் தனது படைவீரர்களுக்கு இவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றுமாறு ஆணையிட்டானாம். படைவீரார்களோ பார்ப்பதற்கு மலைபோன்ற தோற்றமும் நீண்டமூக்கும் அகன்றவாயும் ஈவிரக்க மற்றவர்களாகவும் காணப்பட்டார்களாம். இப் படைவீரர்களினால் எம்மக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக கப்பலில் ஏற்றபப்பட்டனர். கப்பல் புறப்படுவதற்கு தயாராகியது. இதனால் பீதியடைந்த மக்கள் எம்பெருமானை நினைந்து நாகராசாவே! எம்பதி மக்களை அந்நியர்கள் சூறையாடுகிறார்கள் எம்பதி மக்களைக் காப்பாற்றமாட்டாயா. உன்கண்தான் குருடானதோ காதுதான் செவிடனதோ எம்பதி மக்களைக் காப்பாற்றுவாயாக என்று ஓலமிட்டு முறையிட்டு புலம்பினார்கள். இவர்களது புலம்பல் அலறல் சத்தங்களை செவியுற்ற அடியார்க்கு எளியனாகிய நாகேஸ்வரப்;பெருமான் தனது திருவிளையாடலைக் காட்டத் திருவுளங்கொண்டார். கப்பலின் பாய்மரத்தின் உச்சியில் காட்சி கொடுத்தார். கப்பல் நகரவில்லை. படையினர் பாய்மரங்களை பரிசோதிக்கலாயினர். பாய்மரத்தின் உச்சியில் பாம்பொன்று காணப்பட்டது. “பாம்பென்றால்
படையும் நடுங்கும்” கப்பல் தலைவனுக்கு அறிவிக்கப்பட்டது. பாம்பினைக் கண்ட கப்பல் தலைவன் பாம்பினை வெட்டிக்கொல்லுமாறு ஆணையிட்டான். பாம்பு வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட பாம்பின் இரத்தத் துளிகளிலிருந்த பல நூறு பாம்புகள் காட்சிகொடுத்தன. அவ்வேளையில் கப்பலில் இருந்த மாலுமியொருவன் ஆவேசமுற்று இப்பதி மக்களை இறக்கினால் கப்பல் நகருமென்று கூறலாயினான். ஆவேசக்காரன் இவர்களை அடையாளங் காண்பதற்காக கப்பலில் இருந்த அரிசி மாவினை அள்ளி வீசினான். இப்பதி மக்களின் மார்பிலே அரிசிமாக்குறி காணப்பட்டது. மாக்குறி கண்டவர்களை இறக்கிவிடுமாறு ஆணையிடப்பட்டது. மாக்குறி கண்டவர்கள் இறக்கப்படும்போது பாம்புகளும் ஒவ்வொன்றாக இறங்கலாயின. இரண்டு பாம்புகள் இறங்கவில்லை. கப்பலும் நகரவில்லை. மீண்டும் ஆவேசக்காரர் கூறுகிறார் இக்கப்பலின் அடித்தளத்தில் ஒரு பெண்பிள்ளையும் அவளது செல்லப்பிராணியாகிய பூனைக்குட்டி ஒன்றும் உள்ளது. அவர்களையும் இறக்கினால் கப்பல் நகருமென்று கூறினார். அவர்களும் இறக்கப்பட்டனர். இரண்டு பாம்புகளும் இறங்கி ஐந்து தலை நாகமாக காட்சிகொடுத்தது. படையினர் அடியற்ற மரம்போல் வீழ்ந்து வணங்கினர். கப்பல் ஆடி அசைந்து நகரத் தொடங்கியது. அன்றுமுதல் எம்பெருமானை “சிறைமீட்டவனே” என்றும் வணங்கலாயினர். எம்மவரை சிறைமீட்ட அத்தினத்தினையே அன்று முதல் வருடா வருடம் புரட்டாதி மாதத்தில் வரும் பூரணைக்கு மறுதினம் பிரதமையில் எம்மக்கள் மிக விமரிசையாக கொண்டாடுவர். ஐந்து தலை நாகமானது கவுத்தந்துறை துறைமுகத்திலிருந் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாம். எம்பெருமான் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடத்திற்கு வந்த பாதையினை நாகம்சரிந்த வாய்க்கால் என்று நம்மவர் கூறுவர். அப்பாதையினை இன்றும் நாம் காணலாம். பிற்காலத்தில் நாகர்கோயில் குடாரப்பூர் முத்தமிழ் வித்தகரும் ஆயுள்வேத வைத்தியருமாகிய செல்லப்பா கணபதிப்பபிள்ளை அவர்கள் இயற்றிய நாகதம்பிரான் கப்பல் திருவிழா வைபவ வரலாற்று நூலிலே கப்பலிசையாக காணப்படும் பாவினையும் இவ் வரலாற்றி சேர்த்துக் கொள்வது பொருத்தமாயிருக்குமென எண்ணி இதில் உட்புகுத்தியுள்ளேன். இந்நூலினை 1974ல் நாகர்கோயில் குடாரப்பூர் அவரது மகன் சிவ அன்பன் க.குமாரசாமி வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஆக்கம் : வல்லிபுரநாதர் பத்மநாதன்,
பொருளாளர், நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை
(ஓய்வுநிலை மோட்டார் போக்குவரத்து உதவி ஆணையாளர்,யாழ்ப்பாணம்)

கப்பலிசை
தரு:- “ஏலேயெலோ”
பாவலருக் கருள்புரியும் – முன்னேன்
பாதமலரைப் – பணிந்து நிதம்
காவலுறும் நாகர்பதி – வந்த
கப்பல் விழாக்கதை புகல்வேன் 1

முடுகு: பாரினுறு மண்டங்கள் பலகோடி தன்னில்
பாரதமெனும் வருஷமாம் பரதகண்டம்
சீரிய சம்புத்தீவு தனிலிந்தியாவினை
சேர்திருவனந்த புரமாயதொரு நகரில்
காரியமதாக மழைதான் பெய்து வெள்ளங்
காடு நாடாகவே கடல்போல் நிரம்பி
பேருமில்லாமலே பெரிய நகரழிய
பெருமையுடனாள ரசர்பின்னதை யறிந்து
பெரியோர் – சபையில் – ஒருவாறிசைய 2

என்ன செய்வோம் என்னயோசனைகள் செய்து
எங்கு சென்றுங்குடிக் கேற்ற சனமேற்ற
மன்னவர் படைத்தலைவர் மாலுமிகள்கூட
வருகப்பல் கொடுசென்று வாருங்களென்ன
பின்ன மில்லாது பல பண்டங்களுடனே
பிடவைவகை வாசவகை பேர்பெறு சரக்குகள்
கன்னியர் களாடவர் கலக்கும் மருந்துகள்
கருதுவெடி பீரங்கி காலாட்களுடனே
கருதும் – படியே – அரவங் – கடையவே 3

எண்ணரிய தளபாடமுட னேற்றியங்கே
ஏர் பறங்கிக்காரர் உயர் கொடியிழுத்து
கண்ணிய முறுங்கோடிக் கரைவழி திரும்பி
காங்கேயனாந் துறையைக்கண்டு முன்னோடி
வண்ணமிகு மயிலிட்டி வல்வெட்டி தாண்டி
வார் பருத்தித்துறையில் நேரக ஓடி
கண்ணனுறை கற்கோவளத்தைக் கடந்து
காரை நாகர்கோயில் சேர் கவுத்தந்துறைக் கரை
கடலின் – புடையே – படரும் – இடையே 4

தங்கி நங்கூரமது தானிட்டிறங்கி
தாவு கரை சாரவே மேவுமதிகாரிகள்
வங்கமதிலுள்ள பொருளிங்கே கொணர்ந்து
வாருங்கள் பாருங்கள் வாங்குங்களென்றே
இங்குறையும் வாலிபார்களாயிரம் பேரை
ஏமாற்றியே பிடித்தே கட்டி யேக
பங்க மிகவானத்தைப் பார்த்ததாய் தந்தையர்
பாலர் முதியோருடன் பாவையருமாக
– பரிவால் – உருகித் – தரியா – தலறி 5

சங்கு சக்கர நாகதம்பிரானுறையும்
சந்நிதிமுன்னேகிய தங்கள் துயர் செப்பி
எங்களுக்குனையன்றி யொருவர் துணையில்லை
இவ்வேளை காத்தருளுனக் கபயமென்றே
துங்கமிகு நல்லூண் துறந்து துயிலின்றி
சோல்விரத மாய வருமுன்னிலையில் வைக
துங்குமடியார்கள் வினை தவிர்த்தருள நாக
தம்பிரானர வாய் சரிந்து கடல் மீதே
– தருபாய் – மரமேல் – அரவா – யுறவே 6

கப்பல் மிசை யேகியே கருணைசெய வைகைமுன்
கட்டி வருமாட்களைத் திட்டமுடனேற்றி
அப்பொழுது பாயெடுத்தோட வசையாமல்
அஞ்சுகாற்றும் மழையுமாகியலை செம்ப
தப்பவரிதாமென்று கப்பலுறு பேரெல்லாம்
தத்தளித்தேயலறு மத்தருண வேளை
தெப்ப மினியாழு மெனவே சில வரேங்க
தேடுபாய் மர மீது சேரரவு கண்டே
– துரைமு – னவர்போ – யுரைசெய் – திடவே 7

தக்கதுரையுத்தர வினொத்த திறல்வீரன்
தாவு கரவாளினால் சர்ப்பத்தை வெட்ட
பக்கமதிலு திரத்தெறித்த விடமெல்லாம்
படமெடுத் தாயிரம் பாம்புரு வமாக
ஒக்கும் படைத்தலைவ ரேங்கிப் பயந்தே
ஒதுங்கிப் பதுங்கியிட வொருவ னாவேசனாய்
இக்கரையி லெமதடிய ரெவரையு மிறக்கி
ஏகவிட்டே கப்பலோடு போவீரென்ன
– இதுசோ – தனையோ – எது – தேவதையோ 8

அருளுவீரென நாகதம்பிரா னென்ன
அப்பனே யுன தடியாரென்று தெரியும்
உரையென்ன வரிசிமாவுட னெறிந்திவ்வூர்
உற்றவர்க்கொரு பொட்டு மார்பிலிருக்கு மென்றோத
வரிசையுடனே பார்த்து மற்றவரிறக்க
வந்து கரைசேர மீயாவுமொரு மாதும்
பரிவுடனிருக்கினும் பார்த்திறக்கிடுமெனப்
படமாடு மரவ மாயிரமான தகலப்
படமமைத் – துடனோர் – வடிவங் – கடைய 9

சொற்ற படியேவர் துரத்திடனிறங்கித்
தொண்டனிட் டேகினார் தொல்லைகள் தவிர்த்தே
மற்றவர் வழிகொண்டு வந்தில்ல மெய்தி
வாழ்ந்திருந்தா ரென்றும் வழியடியராக
சுற்றமாயினர் களொரு துயருமில்லாமல்
சிறைமீட்ட தெய்வமென்றே விழாச் செய்தார்
உற்றவர் தமக்கருளி யின்று மருளோட
உயர் நாகர்பதி மீதுலுறை தம்பிரானே
– உந்தன் – அருளே – யென்று –மறவோம் 10

எணசீர் ஆசிரிய விருத்தம்

கோலமிகு வாலெயிறு மேலுயர வாடுபடங்-
கோடி மகுடங் களையுந்துங்
குலவ வரு சங்கு சக்கர மிகு மருஙங்கினுங்-
கோதை மலரோடு செறியச்
சீலமுறு பாலினிற மாயுடலமேவு
மரவாயுறவு சேர் வடியார்
சிந்தை தனில் முந்துவினை பந்தமற நீக்குமுன்-
சீருருவை யோரு மறிஞர்
நீலமுறு மாவினரு ளுருவென்று கொள்பவோ-
நீடுபரை சிவனென் பரோ
நின்னையெப்படி நினைந்துன்னடியார் போற்றுவது-
நிமல சுயரூப மெதுவோ
வால பிரகாச வொளியாகி வெளியாகி-
மனுவாயிரரை மீட்டவடிவே
வாசமலரோடை வயலூடு யருநாகர்பதி-
வாழ் நாகதம்பிரானே
தானமலியேழ புவிவாழநரு மாளுமரசரும்-
அரசும் மருவி வாழ்க
தக்கமறையாகம புராணமிதிகாச மொளிர்-
சைவ மென்னாளும் வாழ்க
கனமாலிஞான வயிரவனம் மன்ஐயனுங்-
கஞ்சனரி யரனும் வாழ்க
கயமுகப் பொருளாறு முகவெம் பிரானுமுன்-
கருணை புரியயிலும் வாழ்க
ஊனமறு மறையவர் களிறை யவர்கள்-
உளவர் ரேனையர் தொமில்கள் யாவும் வாழ்க
உமதடிமை யெமதடிமை குடிமுழுதுமடியடிமை-
யென்னாளும் மன்னிவாழ்க
வானமலி மழை விளைவு தானமுற வாழ்மாதர்-
வருகற்பு மறமும் வாழ்க
வாசமல ரோடைவயல் நாகர்பதி
வாழ் நாக தம்பிரான் வாழ்க வாழி

நாகர்கோயில் நாகதம்பிரான் கப்பலிசைக் கண்ணி
விநாயகர் துதி
வெண்பா
குடக்கோடு வாசி குளிர்சிந்து கோகனகம்
மடக்கு நவசந்தடவி யாஞ்செய் -புடைக்கனுறச்
சம்போடரிச்சனமுந் தா நாகர்கோயிலுறை
தும்பிமுகர் பாதந்துணை 1

தரு: ஏலேலோ – ஏலெலோ – தத்தெய்தா – ஏலேலோ – ஏலெலோ
மாமதமாம வதனனொரு மருப்பனிரு மலர்ப்பாதத்தோன்
நாம விநாயக விநாயகன் – நற்பதத்தை நாம் மறவோம் 2

துரிதம்
மாமறை முதற் பராசக்தி மா மைந்தனே
வாரண முகத்தவா வாகு வாகனா
நாம நீராழி சூழ் நாடிலங்காபுரியில்
நாம் சென்று வங்க நங்கூர நாட்டிடவே
நாத வருள் தா – நாகா – னனனே – ஏலேலோ 3

சாமளக் கச்சைகட்டிச் சட்டையிடுவீர்
சண்டமிண்டாயுதந் தண்டு தாங்கிடுவீர்
ஆமளவு பாய் நாட்டி யாட்டி யோட்டிடுவீர்
அச்சாணி வைத்த சுக்கானிசைத் தாட்டுவீர்
அடவீரர்களே- கொடி –ஆடிடுவீர் 4

தாமமார் பாரச் சமுக்கா வமுக்குவீர்
சாங்க மோடோங்கு பீரங்கி தாங்கிடுவீர்
போமாறு மாருதம் பொருதென்றல் கொண்டலோ
பொருவாடை கோடையோ புடைமாறு சூறைN
பொருகால் சரியோ – பொரு – வீரர்களே 5

கோமதம் போமதம் போதமேற் கொள்ளுவீர்
கொண்டோடி மீண்டு கோடிக்கரைக் கேகுவீர்
ஆமிது மெத்தச் சரி காங்கேசன்துறை
அப்பாற் பருத்தித்துறைக் கப்பால் விட்டோட்டுவீர்
ஆர்நங் – கூரம் – அடைவாய் – இடுவீர்

தரு:
வாரீர் -படைவாழ் வீரரே- கரை-
வந்த திந்த வகைச்;சரக்கு
ஏரீர் என்றிங் கெவர்களையும் அழைத்
திட்டே கட்டி ஏற்றிடுவோம் நாம் 7

துரிதம்
சாரடா சரி சரி சங்கு வங்காவுடன் –
சண்டமிண்டாத சார் பீரங்கி தீரடா
பாரட யாவரும் பாருளோர் வருகிறார்
பாடலம் பட்டாடை பாடாடு மாடனை
பலதும் – விலைதான் – பாரீர் – வாரீர் 8

பாருங்க ளாரவாரம் பவள வாரமொடு
பண்டமொடு வெள்ளி படிமக் கலம் பளிங்கு
வார மேதோ வெட்டி வேர் நாவி நெய்யோ
மான்மதங் குங்குமம் மருக்கொழுந் தேரீர்
வாரீர் – பாரீர் – வாங்கீர் – இங்கே 9
ஆரமோ வத்தர் பன்னீரழக மலரோடு

அறையு நற்றயில முடனாங் கோரோசனையே
ஏரு நன் மாதருக் கானவோ பணவா
ஈடுவல வோடிடுவம் ஏரும் வாருங்கள
ஏற்பீர் – ஏற்பீர் – இதுபோல் – எதுதான் 10

தாருங்கள் குச்சளஞ்சாலை நற்பகம்பளஞ்
சம்பளந் தாருங்;;கள் கும்பகோணச் சால்வை
வாருங்கள் வாங்குங்;கள் மலையாள விலைதான்
வாங்குவீர் வங்காள பீசமோ வீசமோ
வாரீர் – தாறோம் – வகையாய் – ஏரீர் 11

தரு
நல்லதொரு நாமமுள்ள – புது- நற்சரக்கு
நஞ்சு கஞ்சா எல்லாந் தாறோம்
எல்லவரும் – வந்திங் – கேற்றிடுவீர் – ஏற்பதிங்கே 12

துரிதம்
கல்மதங் கலனார் கராம்பு வேற்கொம்புடன்
கடுகு கோரோசனை கடுக்காய் நெல்லி தாண்டி
வல்ல பொரிகார மரிதாரம் வாசுவாசி
வளுவாத கிளியூறல் பிழியூறு மருவி
வாரீர் – வாரீர் – வாங்கீர் – இங்கே 13

நல்ல வாலுளுவை கற்பூர நன் மிளகுடன்
நாடு மிலவங்க மோடான னன்மதுரம்
சொல்லுஞ் சதகுப்பை தோணுந் தேவ தாரமொடு
சொன்னபடி தருகிறோம் சோதிமங்கையரே
சுருளின் – பணியோ – துணைக் – காதணியோ 14

எல்லை போமுன்னதாய் எல்லோரையுங் கட்டி
ஏற்றியே வங்க மேலேற்றியே ஆழிமேற்
செல்லுவோ மெல்லோரும் மோடித்தி காந்தமாய்
தேடியிவரைப் பிடித் தேகுவீர் வீரரே
சேரீர் – ஓடித் – தேடி – வாரீர்
ஏலேலோ -ஏலேலோ–தத்தெய்தா–ஏலெலோ–ஏலெலோ 15

எல்லோரையுங் கட்டி ஏற்றுவீர் வங்கமேல்
ஏற்றுவீர்; பாய்மரம் ஏற்றுவீர் சுக்கானைப்
பல்லூரும் பாம்படா பாய்மரக் கூம்படா
பாரடா வெட்டடா பாதியாய் வாளினால்
படுமாட ரவம் படுமா றிதென்ன
ஏலேலோ – ஏலேலோ தத்தெய்தாம் ஏலேலோ 16
தரு:
கரிமுகனே கணபதியே–தேவ–கர்த்தனெயுன் கழல் துணையே
அரியடிசேர் அரியாயிரம்-எங்கள் -அம்பியின் மேலானதென்னதுரிதம் 17

துரிதம்
அரகரா சிவசிவா ஆனந்தரூபா
அத்திரி குமாரியே ஐங்கரக் கடவுளே
அரு வயிரவா வீரபத்திரா ஆறுமுகா
ஐயனே எங்க டனை யாண்டருள் வீரே
ஆனால் – இனியே – தாமாய் குவதோ 18

அரிகரி நமோ நமோ நாராயனா பரை
ஆடரவு தேடுகழ லாடுமடியோனே
உரைசேரு மெங்களுரோட விக்கப்பல்
ஓர் குறையு மணுகாது நீயருள வேணும்
உன்தன் – அருளே –யினிநா – மடைவோம் 19

சரிசரியடா நாகதம்பிரா னருளடா
சாற்றடா போற்றடா தடைபடா திடைவிடா
தருகுவா யருளென நாகதம்பிரானே
நாகதம்பிரானைத் துதித்தாண்டி யேகுவமே
சரணம் – சரணம் – சரணம் – சரணம் 20

பரிவார வீரரே பீரங்கி தீருங்கள்
பாய்மரங் கப்பியாப் பாருங்கள் சுக்கானை
விரைவோடு நிரையோட விடுபாயிறுக்கடா
மேலாட வாலாடு கொடி மீதிறுக்கடா
விடுவீர் – விடுவீர் – மேலொன்றுளதோ
ஏலேலோ – ஏலெலோ – ஏலெலோ 21

சரணம் – சரணம் – சரணம் நாகதம்பிரானே
தயவருள் தயவருள் தம்பிரானே
கருணை கொடுன தடியார்கள் வாழ்க
காத்தருள்வாய் பதி காத்தருள்வாய் 22

குடரப்பு ஆயுர்வேத வைத்தியர் காலஞ்சென்ற
செல்லப்பா கணபதிப்பிள்ளை எழுதிய ஏட்டிலிருந்து

நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்
கப்பல் திருவிழா

விருத்தம்
தாருற்ற மன்னவர் தனைச் சூழ்ந்திடப்படைத்
தலைவர் மாருக் குறுமித்து
தங்காமலே வடகரையில் வந்து நின்ற
கப்பலில் தானேறி யிங்கு வந்து
பாருற்ற நற்சிறை பிடித் தேத்த விவ்வூர்
பதிந்து வெம்பதியி லுற்ற
பநிமதிப் பிள்ளைகள் தனைக் கவர்ந்தே தனது
பதிதனக் கேகவென்றே
நேருற்றிடும் வேளையிற் பாய்மரத்தி லுற்ற
சர்ப்பத்தை வெட்டி நிரம்பப் பரப்பி
பரப்பிர மொதுங்கப் பயந்தவர்கள்
நிற்க நீர் மாவையள்ளி
மார்பிடத் தெளித்தே சிறை மீட்டெடுக்கும்
வழி யடிமை யானவற்கு
மலைபோல வருபிணிகள் தொலைபோக நீங்கும்
ஐந்து தலை நாகதம்பிரானே. 1

திருமேவு வடராச ரடிசூடு முடிவீரர்
சிறையெம்பரத் தம்பிமேற்
றேடியிங் கோடிவந் தாயிர மனுப்பிடித்
தேற்று போதருளுற்ற நீர்
கரைமே நாவாயி லரவாயுறக் கண்டவன்
வாள்கரங் கொண்டு துண்டித்திடக்
கறைதெறித் துடலெடுத்திடு படத்
தாயிரங் கட்செவி கணத்திரைத்துன்
அருள்மேவு மொருவ னாவேசனா
யரிசி மாவாலடி யரங்கத்துற
வறிகுறி படுத்தியிக் கரையுற விடுத்தி
யன்றருளு மருளாழியானே
கருமேவு மருதோடு நேராடு கோடாரு
மலர் மஞ்சனத் தஞ்சமாய்
நீளுமிரு நீழலெழு நாகைநகர்
வாழ் நாக தம்பிரானே 2
பூவுலகின் மேலான தலமென்ற முறையி
னருள் புரிகின்ற நாகர்பதியிற்
பொருந்துஞ் சனங்களை வடக்கன் பிடித்
தரிய பொற்கப்பல் தனிலேற்றியே
தாவுலவு பாயிளுத்தோட வசையாமலே
தடைகண்டு பாய்மரத்திற் றங்குற்
சற்பத்தை வெட்ட வாயிரவரவு தானுறத்
தலைவன் மிசை
தேவுலவு மொருவ னாவேசனா யரிசிமாக்குறி
தோய்ந்தபடி கண்டிறக்கித் தெண்ட
னிட் டேகவழி கொண்டு விட்டாயிரஞ்
சிறைமீட்டு நிறை காட்டினாய்
மாவுலவு மலர்வாவி பூகமடல் நறவாகி
வாலை குதிபாயும் வயலால்
வளைநாகர் தம்பதியில் உருவாகி நற்கிருபை
தருநாக தம்பிரானே 3

அலையாழி மீதெழுந் தருகோடி வருகப்ப
லதில் மேவி வரு குலத்தோர்
அடைக்கல மடைக்கல மடைக்கல முனக்
கென்றரும் பொன்னை வாரியிட்டே
தலையான வைந்துடைய பொருள்நாக
மென்றவர் சஞசலம் கொண்டேகியே
தங்காது கொண்டோடி மங்காத தீவிற்
சனங்களை மிகுத் தேத்தியே
நிலையான ராச்சிய மடைந்த பின்
னன்பான நிமலை பூரணி தனக்கு
நிகரிலா மணிவேணு மென்றவர்க் கருளியே
நீயெடுத் தேகவென்று
மலைநேர் புயங் கைகொடுத்தன்று மீட்டசிறை
வழியடிமை யானவற்கு
மலைபோல வருபிணிகள் தொலைபோக நீக்கு
மைந்துதலை நாகதம்பிரானே 4

வடமன்னர் படை கிடுகிடுத்தாட
வங்கமொடு மகராலயங் குலுங்க
மாநிலங் குலையாமல் வானிடங்கலைய
மாமாருதஞ் சுழல விண்மண்
இடியமலை முடிய மடமடென வுடல்னெளிய
வாயுறுமி யாயிரih மீட்டிங்
கேகு மருழாளியே மீழியே கோழி
விளுதிடவுரு வமைத்த கோவே
இடபவாரூடரோ கெருடவாரூடரோ
வெத்தேவரோ வறிகிலேன்
வின்னிலத் தரசெற்றல் சண்டாளர்
பிணி வறுமை யெய்திடா தருளையனே
அடியருக் கடியரா யரவுருக் காட்டிமுன்
னாழுவதின் னாளில்லையோ
அந்தர சுகந்தர நிதந்தர சுகந்தரா
வாழ் நாகதம்பிரானே 5
கோலமிகு வாலெயிறு மேலுயரவாடு
படங் கோடி மகுடங் களைந்தும்
குலவிவரு சங்கு சக்கர மிரு
மருங்கினும் கோதை மலரோடு செறிய
சீலமுறு மாலினிற மாயுடல மேவும
ரவா யுருவுசேர வடிவாய்ச
சிந்தைதனில் முந்துவினை பந்தமற நீக்கு
முன் சீருருவை யோருமறிஞர்
நீலமுறு மாலினரு ளுரு வென்று கொள்வரோ
நீடுபரை சிவ னென்பரோ நின்னை
யெத் தேவென நினைந்தன்பர் போற்றுவது
நிமல சுயரூப மெதுவோ
வாலபிரகாச வொளியாகி வெளியாகி
மனு வாயிரரை மீட்ட வடிவோ
வாசமலரோடை வயல்தாவு திருநாகர் பதிமேவு
வாழ் நாகதம்பிரானே 6

அந்தமுள சம்பு கொக்கட்டி
வளர் ஆரணியமாகட்டு மென்றோ
அலைகடலில் முத்தான மண்கும்ப
மதிற் பவளமேவு மன்றோ
சந்தண மரமருகிற் சார்கின்ற தன்மையோ
சந்தம் வாடமஞ்சளும்
சங்குசக்கர நாகதம்பிரான் கோயில
ருகாய் யிருப்பதி னாலயோ
இந்தரு கிருப்பதும் செம்மையோ
கவிஞர் செவி கொள்ள நல்லிடமதிற்
திரவிய மிருக்கின்ற தன்மையோ
தேவர்கள் தருசிக்க வரு தலமிதுவோ
தொடர்ந்து நங்களை தோறு மோடி
விளையாடிடும் நாகர் தங் கோயில்மேவு
நாக ஓங்கார உத்தண்ட காலசூல
வைரவ தேவனே 7

நாகர்கோயில் பூர்வீக நாகதம்பிரான்
ஊஞ்சல்

சீராரும் குணகடலின் மேல்பாதத்தில்
திகழுமணற் குன்றுமிகச் சிறப்போடோங்கும்
பாராருமடியர் குளாம்பரவி வாழ்த்தப்
பளிதவிர் நாகர்கோயில் பதியில்வைகும்
ஏராரும் நாகேஸ்வரனிருதாள் போற்றி
எளில்மேவு மூஞ்சலிசை யெடுத்துப்பாடக்
காராருமைந் துகரத்தெந் தையாகும்
கரிமுகவ னிருசரணங் காப்பதாமே 1

திருமருவு கயிலையொடு மேருவென்னுஞ்
சிறந்த விருபூதரமே கால்களாகக்
கருதரிய பரவெளியே விட்டமாகக்
காணரிய சதுர்மறையும் புரிநானாகப்
பொருவுபிர ணவமெழிலார் பீடமாகப்
புரிதருபொன் னூஞ்சல்மிசை பொலிந்துவைகி
அருளொடுநன் நாகர்கோயிற் பதியில்வந்து
அமர்ந்த நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 2

மார்பிலணிதரு புரிநூன் மன்னியாட
மண்டலகுண் டலவரிசை வயங்கிநீடச்
சீருலவுகண்ட சரஞ்சேர்ந்து நீடத்
திகளரைஞாண் சிறுசதங்கை சிலம்புநேட
ஏருலவு பார்பதியார் விட்டுணுவென்று
மிருசத்திமாரு மிருமருங் கிறகூடத்
தாருலவு மன்பர்செறி நாகர்கோயில்
தங்கும் நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 3

துய்யகரிமுக னுறையாலய மோர்பாங்கர்
சொல்லுமுரு கையனாலய மோர்பாங்கர்
செய்யுமரு ளம்மனாலய மேர்பாங்கர்
செண்டுசெறிகரத் தையன்பதியோர் பாங்கர்
கையதனில் வாள்தரித்த வீரபத்திரன்
கருணைபுரி பத்திரையாலய மோர்பாங்கர்
மெய்யடியார்க் கருள்புரிய நாகர்கோயில்
மேவும் நாகேஸ்வரரே யாடீரூஞ்சல் 4

தருமருவுமோங் குபுன்னை மருதுநாவல்
தயங்குநொச்சி கொக்கட்டி சன்னாசிமூலி
அரியபுட்பச் சோலைகுளந் தருக்கள்தாவ
ஆதிவென்றும் வயிரவரு மருங்கின்மேவக்
கருணைசெறி மருதடியான் ஞானமூர்த்தி
காவல் வைரவர்கூடக் கருணைசெய்து
திருவுறைநன் வயல்நிறையும் நாகர்கோயில்
சேர்ந்த நாகேஸ்வரரேஆடீரூஞ்சல் 5

தக்கமறையந் தணர்கள்தரி யாதேர்த்த
தவில்முதல வாழ்த்தியங்கள் தயங்கமோத
மிக்கசுர நாகசின்னம் வீணையூத
வெண்சங்குந் நாதமுடன் கவிஞர்பாட
பக்கமெலா மடியாடி முடியிற்சூடப்
பன்னியர்க ளிருமருங்குங் கவரிபோட
மைக்கடலின் சார்புறுநன் நாகர்கோயில்
வைகும் நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 6

தாவுசலந்தரனுடல் சக்கரத்தால் மாய்த்து
தந்தியின்றோல் போர்த்தமரர்தனை முற்காத்தாய்
மேவுசடைமேன் மதியைநதியை வைத்தாய்
மேருதலதனை வளைத்தாய்விடமே யுண்டாய்
ஆவலுடன்பவம் புரிந்தேயவுணர் வைகும்
அப்புறத்தை நீறாக்கியருள் செய்தாண்டாய்
காவல்கட லாயுறுநன் நாகர்கோயில்
காத்த நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 7

மகிழ்வினொடு முனிவரொரு மகத்தையாற்ற
மன்னியந்தத் தீயிலொருபுலி தான்தோற்ற
மிகமுனிவர் மடியேவிடையைப் பெற்று
மேவிவர நவகோடி விண்ணோர்கள்
உகிர்விரலாற் றோலுரித்து அரையிற்சாத்தி
உமையுடனே கயிலைமலை யுறைந்ததேவே
அகமலியுஞ் சகமதில்நன் நாகர்கோயில்
அமர்ந்த நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 8

ஏர்மேவு வடதேச வெள்ளைக்காரர்
இக்கரையிற் கப்பல்மிசை ஏறிவந்து
ஊர்மேவு பலசனத்தைப் பிடித்தேயேற்றி
யேகும்போதொரு பாம்பாயுரு மேற்தோற்றி
தார்மேவுபாயெ டுத்தேயோடா வண்ணந்
தடுத்துவிடுத் தாயிரரைத்தற் காத்தாண்டாய்
ஆர்மேவு வளமுறுநன் நாகர்கோயில்
அமர்ந்த நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 9

சரமசரமெனு மான்மகோடி யுய்யச்
சதுர்மறை யாகமங்கலைகள் தளைத்துமல்கப்
பொருவிலறு சமயநெறி நீதியோங்கப்
பூதலத்தின் மீதுமழை பொழிந்துதேங்க
மருவுபயிர் மிகச்செளித்து வளங்களீய
மன்னுமுயிர் அகமலிந்து மகிழ்நேய்க
கருணையொடு புவிதனின்நன் நாகர்கோயில்
காத்த நாகேஸ்வரரே ஆடீரூஞ்சல் 10
அருமறை தேரந்தணரும் பசுவும்வாழி
அரசர்முறைச் செங்கோலு மறமும்வாழி
திருவுறையு மாலையங்கள் சிறந்துவாழி
செகமதனி லடியர்குளந் தினமும்வாழி
பரவுறுநல் லீரேளுபதியும் வாழி
பங்கயத்தனாதி விண்ணோர் பலரும்வாழி
கரைகடலாய் நன்நாகர் கோயில்வைகிக்
கருணைசெய் நாகேஸ்வரரே வாழிவாழி 11

இப்பாடலை இயற்றியவர்:
நாகர்கோயில்,குடாரப்பு ஆயுர்வேத வைத்தியர்
காலஞ்சென்ற செல்லப்பா கணபதிப்பிள்ளை
தொகுத்தவர்: -வல்லிபுரநாதர் பத்மநாதன்,
பொருளாளர்,
பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலன சபை
நாகர்கோயில்